5 செப்டம்பர், 2012

தமிழ் ஈழமும் முஸ்லிம்களும் - பகுதி 4


தமிழர்களின் உரிமை மீட்புப் போராட்டங்களுக்கு முஸ்லிம்கள் ஆதரவளித்த போதிலும், அவர்களின் தனி ஈழக் கோரிக்கையைக் கிழக்கு மாகாணத்தில் வசித்து வந்த முஸ்லிம்கள் ஏற்கவில்லை. (வடக்கு-கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பகுதிதான் ஈழம்) ஒன்று பட்ட இலங்கையில் ஜனநாயகப்பூர்வமான முறையில் அறவழிப் போராட்டங்களை நடத்துவதன் மூலமே பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என நம்பினர்.
தனி ஈழத்தில் தங்களது நலன்கள் பாதுகாப்பாக இராது என்றும் ஒன்று பட்ட இலங்கையில் மட்டுமே தாங்கள் பாதுகாப்பாக வாழ முடியும் என்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எண்ணினர். ஆனால் தமிழ்ப் போராளிகளின் எண்ணம் வேறு விதமாக இருந்த்து. மொழி அடிப்படையில் முஸ்லிம்கள் தனி ஈழத்தை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினர். தங்களிடமுள்ள ஆயுத வலிமையைப் பயன்படுத்தி முஸ்லிம்களைத் தங்களது கோரிக்கையை ஏற்குமாறு செய்ய முடியும் என நம்பினர். 1980க்கும் 1990க்கும் இடைப்பட்ட இந்த பத்து ஆண்டுகள் தமிழ்ப் போராளிகளின் வாழ்க்கையில் மட்டுமல்ல முஸ்லிம்களின் வாழ்க்கையிலும் திருப்பங்கள் நிறைந்த காலமாகவே இருந்த்து. இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் அரசுப் படையினருக்கும் பெரும் மோதல்கள் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இலங்கைப் படையினரை எதிர்த்துப் போராடி அதே நேரத்தில் தங்களுக்குள்ளும் இந்த இயக்கங்கள் போரிட்டுக் கொண்டன. இந்தச் சகோதர யுத்த்த்தில் (!) விடுதலைப்புலிகளின் (LTTE) கையே மேலோங்கியது. பிற போராளிக் குழுக்களைச் சார்ந்த தலைவர்களை ஒருவர் விடாமல் தேடிக் கண்டுபிடித்து விடுதலைப்புலிகள் கொன்றழித்தனர்.
அரசியல் ரீதியில் போராடிய தமிழ்த் தலைவர்களான அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், உமா மகேஸ்வரன் ஆகியோரையும் விடுதலைப்புலிகள் விட்டு வைக்கவில்லை. விடுதலைப் போர்க்களத்தில் தாங்கள் மட்டுமே இருக்க வேண்டும் பிற இயக்கங்கள், தலைவர்கள் யாருமே இருக்க்க் கூடாது என்ற பிரபாகரனின் பாசிஸ மனப்பான்மையே இந்த ஈவு இரக்கமற்ற படு கொலைகளுக்குக் காரணமாகும். ஒரு பக்கம், பிற போராளிக் குழுக்களைச் சார்ந்த முன்னணித் தலைவர்களையெல்லாம் அழித்துக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் கோபப் பர்வை கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மீதும் திரும்பியது. ஈழக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்காத முஸ்லிம்களுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினர். விளைவு? 1980க்கும் 1990க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் முஸ்லிம்கள் மீதும் பெரும் தாக்குதல்கள் நடத்தினர்.
முஸ்லிம்களின் தொழில் நிறுவனங்கள், பயிற்சி நிலையங்கள், கல்வி நிலையங்கள், வங்கிகள் ஆகிய அனைத்தும் தாக்குதல்களுக்கு உள்ளாயின. தமிழர் பகுதிகளுக்கு வியாபாரத்திற்காகச்  சென்ற சிறு வியாபாரிகளும், வயல்களுக்குச் சென்ற சிறு கூலித் தொழிலாளர்களும், “சிங்கள அரசுக்கு உளவு செல்பவர்கள்என்று குற்றம் சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர். இத்தனை வன்முறைகளுக்கும் உச்சகட்டமான 3.8.1990 அன்று காத்தான்குடி என்ற ஊரில் உள்ள கிராவல் தெரு பள்ளிவாசலில் காலை தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது விடுதலைப்புலிகள் வெளியிலிருந்து இயற்திரத் துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டு 103 பேரைக் கொன்றனர்.
அதே ஊரில் உள்ள குசைனியா பள்ளிவாசலும் தாக்கப்பட்டது. எறாஊர், கிரான்குளம், அழிஞ்சிப் பொத்தான், அகமதுபுரா, பள்ளிகொடா ஆகிய ஊர்களிலும் விடுதலைப்புலிகள் முஸ்லிம் தெருக்களில் புகுந்து தாக்கி ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றனர்.
யாழ்ப்பாணம் நகரில் வசித்து வந்த 70,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், விடுதலைப்புலிகளின் பயமறுத்தல் காரணமாக தங்களது வீடு, வாசல்கள், நிலபுலன்களை விட்டு விட்டு வெளியெற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. “இரண்டு மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் இல்லையெனில் உங்களின் உயிர் மிஞ்சாதுஎன்ற விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக இம்மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறி ஓடினர்.
கடந்த இருபது ஆண்டுகளாகப் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அகதி முகாம்களில் இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். (27.12.2009 அன்று கொழும்பில் நடைபெற்ற அனைத்து இலங்கை முஸ்லிம்கள் காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றி இலங்கை ஜனாதிபதி இராஜபக்ஷே, இம்மக்கள் தங்களது சொந்த வீடுகளில் 31.5.2010க்குள் குடியமர்த்தப்படுவார்கள். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்துள்ளார். ஆதாரம் ஹிந்து நாளிதழ் 28.12.2009)     (தெடரும்.....

4 செப்டம்பர், 2012

தமிழ் ஈழமும் - முஸ்லிம்களும் - பகுதி 3


பிளவின் தொடக்கம்
இலங்கையில் அனைத்து மாகாணங்களிலும் வாழும் முஸ்லிம்கள் தமிழைத் தாய் மொழியாக்க் கொண்டவர்களே. சிங்களத்தை தாய் மொழியாகக் கொண்டவர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையினரே. தொடர்ந்து பன்னெடுங்காலமாகத் தமிழர்களுக்கும் (தமிழ் பேசும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள்) முஸ்லிம்களுக்கும் நல்லுறவே நிலவி வந்துள்ளது. எந்த விதமான பிணக்குமின்றி இரு சமூக மக்களும் அமைதியாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்த நல்லுறவைக் குலைக்கும் வண்ணம் சில நிகழ்ச்சிகள் நடந்தேறின. தமிழ்ப் பிரமுகர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சைவ வேளாள சித்தாந்தம், இந்த நல்லுறவின் அடித்தளத்தை ஆட்டம் காண வைத்தது. இந்த சித்தாந்தத்தைப் பிரச்சாரம் செய்தோர் சைவ வேளாளர்களை உயர்வாகவும் மற்றவர்களைத் தாழ்வாகவும் கற்பித்தனர். முஸ்லிம்களைத் தூய்மையற்றவர்கள் என்றும் தொப்பி புரட்டிகள் என்றும் இழிவுபடுத்தினர்.  பொன்.ராமநாதன் போன்ற தமிழ்த் தலைவர்கள், “முஸ்லிம்கள் தனிப்பிரிவினர் அல்லர் அவர்கள் தமிழர்களே” என்று முஸ்லிம்களின் தனித்துவத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். சைவ வேளாள சித்தாந்தவாதிகளின் இந்தப் புதிய நிலைப்பாடு முஸ்லிம்களிடையே அதிருத்தியை ஏற்படுத்தியது. கொழும்பு மாவட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் வணிகத்தில் சிறப்புற்று விளங்கியது. பிற சிங்கள தமிழ் வணிகர்கள் மத்தியில் பொறாமையை ஏற்படுத்தியது. 1915 ஆம் ஆண்டு கொழும்பு நகரின் பல இடங்களில் சிங்களர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இந்த வணிகப் போட்டி காரணமாக மோதல்கள் வெடித்தன.
முஸ்லிம் வணிகர்கள் பலர் சிங்களர்களால் கொல்லப்பட்டனர். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்தக் கலவரங்களின் போது தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிராகவும் சிங்களர்களுக்கு ஆதரவாகவும் இருந்தனர். ஆனால் அப்போதிருந்த ஆங்கிலேய அரசு நடுநிலையுடன் செயல்பட்டது. கலவரத்திற்குக் காரணமான சிங்களர்கள் பலர் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். கொலைக் குற்றங்களில் ஈடுபட்ட சிலருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால் பொன்.ராமநாதன் போன்ற தமிழர் தலைவர்கள் லண்டன் சென்று மகாராணியைச் சந்தித்து சிங்களர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்துச் செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். தமிழர் தலைவர்களின் இந்தச் செயல் முஸ்லிம்களிடையில் கசப்புணர்ச்சியை ஏற்படுத்தியது.
1889 ஆம் ஆண்டு வரை இலங்கை சட்ட சபையில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் இருந்த்து, இதில் முஸ்லிம்கள் யாரும் நியமிக்கப்டவில்லை. முஸ்லிம்கள் தாங்கள் ஒரு தனித்துவமான சமூகம் என்றும் தங்களுக்குத் தனிப்பிரதி நிதித்துவம் வேண்டும் என்றும் ஆங்கில அரசிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்தக் கோரிக்கைக்குத் தமிழர் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். முஸ்லிம்கள் தமிழர்களே எனவே அவர்கள் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தில் அடங்குவர் என்றனர். எனினும், முஸ்லிம்களின் இடையறாத போராட்டம் காரணமாக சட்டசபையில் தனிப் பிரதிநிதித்துவம் பெற்றனர். இப்படி சமூக, தொழில் அரசியல் ரீதியாகவும் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையில் பிளவுகள் தோன்றின. இலங்கை விடுதலை பெற்ற பிறகு, அங்கு நாடாளுமன்ற ஜனநாயகம் அறிமுகப்படுத்தப்பட்டு அனைவருக்கும் வாக்குரிமை என்ற நிலை ஏற்பட்டது. முஸ்லிம்கள் சிங்களர்கள் நடத்தும் அரசியல் கட்சிகளில் இணைந்து தெற்கிலும், கிழக்கிலும் சில இடங்களைக் கைப்பற்றி சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றனர்.
1960க்குப் பின்னர், கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. ஏராளமான முஸ்லிம்கள் கல்வி கற்றனர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் முஸ்லிம் பாடசாலைகள் அரசின் உதவியுடன் தொடங்கப்பட்டன. அப்போது, இலங்கையின் கல்வி அமைச்சராக இருந்த பதியுத்தீன் மஃமுத், முஸ்லிம்கள் நடத்தும் பாடசாலைகளில் அரபி மொழி கற்றுக் கொடுக்க ஆலிம்களை நியமித்தார். அரசின் இத்தகைய ஆக்கபுர்வமான நடவடிக்கைகள் காரணமாக முஸ்லிம்கள் பெருமளவு கல்வி கற்று ஆசிரியர்களாகவும், அரசுத் துறைகளிலும் வேலை வாய்ப்பினைப் பெற்றனர். முஸ்லிம்கள் பெருமளவு அரசுப்பணிகளில் சேர்ந்த அந்தக் காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் தமிழர்களே உயர் அதிகாரிகளாக இருந்தனர். புதிதாகப் பணியில் சேர்ந்த முஸ்லிம்களை அந்த அதிகாரிகள் நியாய உணர்வோடும், நடுநிலையோடும் நடத்த வில்லை என்ற குற்றச்சாட்டு முஸ்லிம் ஊழியர்களிடமிருந்து எழுந்தது ஏற்கனவே இருந்த கசப்புணர்ச்சி காரணமாக இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் என முஸ்லிம்கள் நம்பினர்.
விடுதலைக்குப் பின்னர் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த சிங்கள அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வண்ணம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டன. 1953ஆம் ஆண்டு, பௌத்த சமயமே அந்நாட்டின் அரசாங்க சமயமாக அறிவிக்கப்பட்டது. சிங்களமே ஆட்சி மொழியாக இருக்கும் என சட்டம் கொண்டு வரப்பட்டது. 1972ஆம் ஆண்டு சிங்கள பௌத்தர் மட்டுமே அந்நாட்டின் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வரமுடியும் என சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதன் பின்னர் கல்வியைத் தரப்படுத்துதல் (Standardization of Education) என்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் படி தமிழர்களை விட சிங்களர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றால் போதும் அவர்களுக்கு உயர் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற நிலை தோன்றியது. சிங்கள பௌத்த அரசியல் தலைவர்களின் இந்தச் செயல்கள் தமிழ் மக்கள் மத்தியில் தங்களது எதிர்காலம் பற்றி ஐயங்களைத் தோற்றுவித்தன. தந்தை செல்வா, பின்னர் அமிர்தலிங்கம் போன்ற தமிழ்த் தலைவர்கள் தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து அறவழிப் போராட்டங்களைத் தொடர்ந்து பல ஆண்டுகள் நடத்தினர். எனினும் இலங்கை அரசின் போக்கில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் அறப்போராட்டங்கள் மூலம் தங்களது கோரிக்கைகளை வென்றெடுக்க இயலாது என்ற முடிவுக்கு வந்த தமிழ் இளைஞர்கள் தங்களுக்கிடையே பல்வேறு அமைப்புகளைத் தோற்றுவித்தனர். 1977ஆம் ஆண்டிற்குப் பிறகு டெலோ, எல்.டி.டி.ஈ, இ.பி.ஆர்.எல்.எப், பிளாட், பேராடென், ஈராஸ், டி.பி.எல்.எஸ். ஆகிய போராளி இயக்கங்கள் தோன்றின. இந்த இயக்கங்கள் ஆயுதப் போராட்டம் மூலமே இலங்கை அரசைப் பணிய வைக்க முடியும் என நம்பின. தவிரவும் இலங்கை அரசு தமிழர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காது. எனவே இலங்கையில் தமிழ் ஈழம் என்ற தனி நாடு ஒன்றை உருவாக்குவதே தங்களது இலக்கு என வெளிப்படையாக அறிவித்தனர். இந்தத் தனி நாடு அறிவிப்பிற்குப் பின்னர் இலங்கை அரசுக்கும், தமிழ்ப் போராளி இயக்கங்களுக்குமிடையே மோதல்கள் அதிகரித்தன.        (தொடரும்......

3 செப்டம்பர், 2012

தமிழ் ஈழமும் - முஸ்லிம்களும் - பகுதி- 2


தினமணி நாளிதழில் பாவை சந்திரன் தொடர்ந்து எழுதிய “ஈழத்தமிழர் வரலாறு” தொடரிலும், தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த “இலங்கைத் தமிழர் வரலாறு” என்ற தொடரிலும் தமிழ் முஸ்லிம்கள் பட்ட வேதனைகள், இன்னல்கள் பற்றிய குறிப்புகள் ஏதும் இடம் பெறவில்லை என்பதையும் தமிழ் முஸ்லிம் சமுதாயம் மட்டுமல்ல தமிழ் சமுதாயம் அனைத்தும் கவலையுடன் நோக்க வேண்டும்.
இந்நிலையில் இலங்கைத் தமிழ் முஸ்லிம்களின் பூர்வீகம் பற்றியும், தமிழ் ஈழம் பற்றிய அவர்களின் நிலைப்பாடு பற்றிறும் அறிந்து கொள்ள வேண்டிய இன்றைய அவசரத் தேவையாகும். கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே இலங்கையில் முஸ்லிம்களின் குடியேற்றம் நிகழ்ந்த்தாக வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக் ஆளுநர் ஹஜ்ஜாஜ் இப்னு யுசுபின் கொடுங்கோன்மை காரணமாக 226 அரபு முஸ்லிம் குடும்பங்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறி கடல் மார்க்கமாக இந்தியாவின் தென் பகுதியிலுள்ள கொற்கை வந்து (தற்போதைய காயல்பட்டிணம்) அங்கேயே தங்கி வாழலாயினர். சில ஆண்டுகளுக்குப் பின் இங்கு வந்த அரபுக் குடும்பங்களில் சிலர் பக்த்து நாடான இலங்கைக்குச் சென்று குடியேறினர். அங்கு சென்ற இம்மக்கள் இலங்கையின் பூர்வீக மக்களோடு திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். பின்னர் இஸ்லாமிய இறை நேச்ச செல்வர்கள் (கல்வத்து நாயகம் போன்றோர்) வணிகர்கள் ஆகியோரின் பரப்புரை காரணமாக ஏராளமான தமிழ் மக்கள் இஸ்லாத்தில் இணைந்தனர். தென் தமிழகத்திலிருந்தும் பல்வேறு காலகட்டங்களில் தமிழ் முஸ்லிம்கள் இலங்கையில் குடியியேறினர்.
இலங்கை மக்கள் தொகையில் 7.12 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள். 1981ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி முஸ்லிம்களின் மக்கள் தொகை பத்து லட்சத்து ஐம்பத்து ஆறாயிரம் ஆகும். (10,56,000) தற்போதையக் கணக்கெடுப்பின்படி இது 15 லட்சத்தை எட்டியிருக்கக்கூடும். முஸ்லிம்களில் அறுபது சதவிகிதத்தினர் இலங்கையின் தெற்கு (கொழும்பு) மேற்கு மத்திய மாகாணங்களில் வசித்து வருகின்றனர்.  ஆனால் இம்மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிதறிக் கிடக்கின்றனர். இதன் காரணமாக அரசியல் ரீதியாக ஒரு பெரிய சக்தியாக உருவெடுக்க இம்மக்களுக்கு வாய்ப்பு இல்லாது போயிற்று.
இதற்கு நேர் மாறாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை, மட்டகளப்பு, திரிகோணமலை, வன்னி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளக்கூடிய அளவிற்குக் கணிசமான செறிவுடன் வாழ்ந்து வருகின்றனர். அம்பாறை, மட்டக்களப்பு, திரிகோணமலை, வன்னி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் முறையே 42, 24, 29, 27 என்ற சதவிகித அளவில் முஸ்லிம்கள் உள்ளனர். ஒரே இடத்தில் அதிகச் செறிவுடன் வாழும் காரணத்தால் இம்மக்கள் அரசியல் ரீதியில் ஒரு சக்தியாக உருவெடுக்க முடிந்தது. கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் சிறு நில உடைமையாளர்களாகவும், நெசவாளர்களாகவும், மீன் பிடிப்பவர்களாகவும் (நீண்ட கடற்கரை அமைந்துள்ளதன் காரணமாக) இருந்தனர். இஸ்லாமிய சமய மரபுகளைக் கடைப்பிடிப்பதில் அதிக கவனம் கொண்டவர்களாகவும்,  சமூகக்கட்டுப்பாடும் இறுக்கமான உறவுகளும் கொண்ட மக்களாகவும் இப்பகுதி முஸ்லிம்கள் விளங்கினர்.
தலைநகர் கொழும்பிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் பெரும் வணிகர்களாக இருந்தனர். இதன் காரணமாக பொருளாதாரத்தில் இவர்கள் பிற மாகாணங்களில் உள்ள முஸ்லிம்களைக் காட்டிலும் சிறப்புற்று விளங்கினர். கொழும்பில் உள்ள சிங்கள தமிழ் வணிகர்களோடு இவர்கள் போட்டி போடும் நிலையிலும் இருந்தனர். மேற்கு மத்திய மாகாணங்களில் வசித்து வரம் முஸ்லிம்கள் சிறு வணிகர்களாகவும், கைவினைஞர்களாகவும் சிறு குடிசைத் தொழில்கள் செய்பவர்களாகவும், விளங்கி வந்தனர். விடுதலைக்கு முன்னரும், விடுதலை பெற்ற பின்னரும் பல ஆண்டுகள் தெற்குப் பகுதி முஸ்லிம்களே (கொழும்பு) அரசியலில் ஓரளவு பங்கு பெற்று வந்தனர். கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு ஏற்படாத அந்தக் கால கட்டத்தில் இந்தத் தெற்கு மாகாண முஸ்லிம் அரசியல் பிரமுகர்களே அவர்களுக்கு வழிகாட்டினர்.   (தொடரும்......

2 செப்டம்பர், 2012

தமிழ் ஈழமும் - முஸ்லிம்களும் தொடர்-1


தமிழ் ஈழமும், முஸ்லிம்களும்
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அந்நாட்டு இராணுவத்திற்கும் பல்லாண்டுகளாக நடைபெற்று வந்த போர் 2009 மே மாதம் முடிவுக்கு வந்தது. விடுதலைப் புரிகளை வீழ்த்தி விட்டோம் என்று வெள்ளிக் களிப்பில் திளைக்கிறது இலங்கை அரசு. இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தியதற்காக மக்கள் தன்னையே மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள் என்ற ஆசையில் எதிர்பார்ப்பில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே தனது பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் சில மாதங்கள் இருக்கும் சூழ்நிலையில் இப்போதே தேர்தலைச் சந்திக்க ஆயத்தமாகி விட்டார். யாரும் எதிர்பாராத விதமாக விடுதலைப் புலிகளை வீழ்த்தியதில் பெரும் பங்கு வகித்த அந்நாட்டின் இராணுவத் தளபதி பொன்சேகா, தனது பதவியிலிருந்து விலகி ராஜபக்ஷேவை எதிர்த்து தேர்தலில் களம் இறங்கியுள்ளார்.
இலங்கை நிலவரம் இப்படி இருக்க, உலகெங்கிலுமுள்ள தமிழ் உணர்வாளர்கள் கையறு நிலையில் நிற்கின்றனர். பிரபாகரன் மரணமடையவில்லை. மீண்டும் புதுத்தெம்புடன் கிளம்பி வந்து இலங்கையில் தமிழ் ஈழம் மலர்ந்திடப் போராடுவார் என்று வைகோ உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்திய அரசு தமிழர்களுக்குத் துரோகம் செய்து விட்டதாகவும், அதற்குத் கலைஞர் கருணாநிதி துணை போய்விட்டார் என்றும் இந்தத் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஊடகங்களில் இந்திய அரசையும், தமிழக முதல்வரையும் கடுமையாகக் குறை கூறி அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இப்படி  தமிழகத்தில் சூடான வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஒரு விஷயத்தை இலங்கைத் தமிழ்த் தலைவர்களும் தமிழகத் தலைவர்களும் மிக வசதியாக மறைத்து விட்டனர். இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பதினைந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் முஸ்லிம்களின் நிலைப்பாடு பற்றிய விஷயமே அது.
இலங்கையில் வசிக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஈழம் தனி நாடு கோரிக்கையை ஆதரிக்கவில்லை. ஒன்று பட்ட இலங்கையிலேயே தமிழர்கள் தங்களது உரிமைகைளை நிலை நாட்டிட ஜனநாயக முறையில் போராட முடியும் என நம்புகிறார்கள். தனி ஈழக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் குறிப்பாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் சொல்ல வொண்ணா துயரங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டன. அவர்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் பெருத்த சேதங்கள் விளைவிக்கப்பட்டன. சொந்த மண்ணிலேயே அவர்கள் அகதிகளாக்கப்பட்டனர்.

                                                                                         தொடரும்......

2019 டிசம்பர்