2 செப்டம்பர், 2012

தமிழ் ஈழமும் - முஸ்லிம்களும் தொடர்-1


தமிழ் ஈழமும், முஸ்லிம்களும்
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அந்நாட்டு இராணுவத்திற்கும் பல்லாண்டுகளாக நடைபெற்று வந்த போர் 2009 மே மாதம் முடிவுக்கு வந்தது. விடுதலைப் புரிகளை வீழ்த்தி விட்டோம் என்று வெள்ளிக் களிப்பில் திளைக்கிறது இலங்கை அரசு. இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தியதற்காக மக்கள் தன்னையே மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள் என்ற ஆசையில் எதிர்பார்ப்பில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே தனது பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் சில மாதங்கள் இருக்கும் சூழ்நிலையில் இப்போதே தேர்தலைச் சந்திக்க ஆயத்தமாகி விட்டார். யாரும் எதிர்பாராத விதமாக விடுதலைப் புலிகளை வீழ்த்தியதில் பெரும் பங்கு வகித்த அந்நாட்டின் இராணுவத் தளபதி பொன்சேகா, தனது பதவியிலிருந்து விலகி ராஜபக்ஷேவை எதிர்த்து தேர்தலில் களம் இறங்கியுள்ளார்.
இலங்கை நிலவரம் இப்படி இருக்க, உலகெங்கிலுமுள்ள தமிழ் உணர்வாளர்கள் கையறு நிலையில் நிற்கின்றனர். பிரபாகரன் மரணமடையவில்லை. மீண்டும் புதுத்தெம்புடன் கிளம்பி வந்து இலங்கையில் தமிழ் ஈழம் மலர்ந்திடப் போராடுவார் என்று வைகோ உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்திய அரசு தமிழர்களுக்குத் துரோகம் செய்து விட்டதாகவும், அதற்குத் கலைஞர் கருணாநிதி துணை போய்விட்டார் என்றும் இந்தத் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஊடகங்களில் இந்திய அரசையும், தமிழக முதல்வரையும் கடுமையாகக் குறை கூறி அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இப்படி  தமிழகத்தில் சூடான வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஒரு விஷயத்தை இலங்கைத் தமிழ்த் தலைவர்களும் தமிழகத் தலைவர்களும் மிக வசதியாக மறைத்து விட்டனர். இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பதினைந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் முஸ்லிம்களின் நிலைப்பாடு பற்றிய விஷயமே அது.
இலங்கையில் வசிக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஈழம் தனி நாடு கோரிக்கையை ஆதரிக்கவில்லை. ஒன்று பட்ட இலங்கையிலேயே தமிழர்கள் தங்களது உரிமைகைளை நிலை நாட்டிட ஜனநாயக முறையில் போராட முடியும் என நம்புகிறார்கள். தனி ஈழக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் குறிப்பாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் சொல்ல வொண்ணா துயரங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டன. அவர்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் பெருத்த சேதங்கள் விளைவிக்கப்பட்டன. சொந்த மண்ணிலேயே அவர்கள் அகதிகளாக்கப்பட்டனர்.

                                                                                         தொடரும்......

2019 டிசம்பர்