தினமணி நாளிதழில்
பாவை சந்திரன் தொடர்ந்து எழுதிய “ஈழத்தமிழர் வரலாறு” தொடரிலும், தினத்தந்தி நாளிதழில்
வெளிவந்த “இலங்கைத் தமிழர் வரலாறு” என்ற தொடரிலும் தமிழ் முஸ்லிம்கள் பட்ட வேதனைகள்,
இன்னல்கள் பற்றிய குறிப்புகள் ஏதும் இடம் பெறவில்லை என்பதையும் தமிழ் முஸ்லிம் சமுதாயம்
மட்டுமல்ல தமிழ் சமுதாயம் அனைத்தும் கவலையுடன் நோக்க வேண்டும்.
இந்நிலையில் இலங்கைத்
தமிழ் முஸ்லிம்களின் பூர்வீகம் பற்றியும், தமிழ் ஈழம் பற்றிய அவர்களின் நிலைப்பாடு
பற்றிறும் அறிந்து கொள்ள வேண்டிய இன்றைய அவசரத் தேவையாகும். கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே
இலங்கையில் முஸ்லிம்களின் குடியேற்றம் நிகழ்ந்த்தாக வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈராக் ஆளுநர் ஹஜ்ஜாஜ் இப்னு யுசுபின் கொடுங்கோன்மை காரணமாக 226 அரபு முஸ்லிம் குடும்பங்கள்
அந்த நாட்டிலிருந்து வெளியேறி கடல் மார்க்கமாக இந்தியாவின் தென் பகுதியிலுள்ள கொற்கை
வந்து (தற்போதைய காயல்பட்டிணம்) அங்கேயே தங்கி வாழலாயினர். சில ஆண்டுகளுக்குப் பின்
இங்கு வந்த அரபுக் குடும்பங்களில் சிலர் பக்த்து நாடான இலங்கைக்குச் சென்று குடியேறினர்.
அங்கு சென்ற இம்மக்கள் இலங்கையின் பூர்வீக மக்களோடு திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். பின்னர்
இஸ்லாமிய இறை நேச்ச செல்வர்கள் (கல்வத்து நாயகம் போன்றோர்) வணிகர்கள் ஆகியோரின் பரப்புரை
காரணமாக ஏராளமான தமிழ் மக்கள் இஸ்லாத்தில் இணைந்தனர். தென் தமிழகத்திலிருந்தும் பல்வேறு
காலகட்டங்களில் தமிழ் முஸ்லிம்கள் இலங்கையில் குடியியேறினர்.
இலங்கை மக்கள்
தொகையில் 7.12 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள். 1981ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்
படி முஸ்லிம்களின் மக்கள் தொகை பத்து லட்சத்து ஐம்பத்து ஆறாயிரம் ஆகும். (10,56,000)
தற்போதையக் கணக்கெடுப்பின்படி இது 15 லட்சத்தை எட்டியிருக்கக்கூடும். முஸ்லிம்களில்
அறுபது சதவிகிதத்தினர் இலங்கையின் தெற்கு (கொழும்பு) மேற்கு மத்திய மாகாணங்களில் வசித்து
வருகின்றனர். ஆனால் இம்மக்கள் நாட்டின் பல்வேறு
பகுதிகளில் சிதறிக் கிடக்கின்றனர். இதன் காரணமாக அரசியல் ரீதியாக ஒரு பெரிய சக்தியாக
உருவெடுக்க இம்மக்களுக்கு வாய்ப்பு இல்லாது போயிற்று.
இதற்கு நேர் மாறாக
கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை, மட்டகளப்பு, திரிகோணமலை, வன்னி, மன்னார் ஆகிய மாவட்டங்களில்
முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளக்கூடிய அளவிற்குக் கணிசமான செறிவுடன் வாழ்ந்து வருகின்றனர்.
அம்பாறை, மட்டக்களப்பு, திரிகோணமலை, வன்னி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் முறையே 42,
24, 29, 27 என்ற சதவிகித அளவில் முஸ்லிம்கள் உள்ளனர். ஒரே இடத்தில் அதிகச் செறிவுடன்
வாழும் காரணத்தால் இம்மக்கள் அரசியல் ரீதியில் ஒரு சக்தியாக உருவெடுக்க முடிந்தது.
கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் சிறு நில உடைமையாளர்களாகவும், நெசவாளர்களாகவும்,
மீன் பிடிப்பவர்களாகவும் (நீண்ட கடற்கரை அமைந்துள்ளதன் காரணமாக) இருந்தனர். இஸ்லாமிய
சமய மரபுகளைக் கடைப்பிடிப்பதில் அதிக கவனம் கொண்டவர்களாகவும், சமூகக்கட்டுப்பாடும் இறுக்கமான உறவுகளும் கொண்ட மக்களாகவும்
இப்பகுதி முஸ்லிம்கள் விளங்கினர்.
தலைநகர் கொழும்பிலும்,
அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் பெரும் வணிகர்களாக இருந்தனர். இதன்
காரணமாக பொருளாதாரத்தில் இவர்கள் பிற மாகாணங்களில் உள்ள முஸ்லிம்களைக் காட்டிலும் சிறப்புற்று
விளங்கினர். கொழும்பில் உள்ள சிங்கள தமிழ் வணிகர்களோடு இவர்கள் போட்டி போடும் நிலையிலும்
இருந்தனர். மேற்கு மத்திய மாகாணங்களில் வசித்து வரம் முஸ்லிம்கள் சிறு வணிகர்களாகவும்,
கைவினைஞர்களாகவும் சிறு குடிசைத் தொழில்கள் செய்பவர்களாகவும், விளங்கி வந்தனர். விடுதலைக்கு
முன்னரும், விடுதலை பெற்ற பின்னரும் பல ஆண்டுகள் தெற்குப் பகுதி முஸ்லிம்களே (கொழும்பு)
அரசியலில் ஓரளவு பங்கு பெற்று வந்தனர். கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மத்தியில் அரசியல்
விழிப்புணர்வு ஏற்படாத அந்தக் கால கட்டத்தில் இந்தத் தெற்கு மாகாண முஸ்லிம் அரசியல்
பிரமுகர்களே அவர்களுக்கு வழிகாட்டினர். (தொடரும்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக