2 பிப்ரவரி, 2010

நல்லூர் முரசு.

முஸ்லிம் ஆட்சி அன்னிய ஆட்சி அன்று.....
       
    “பாஞ்சாலச் சிங்கம்” எனப் போற்றப்பட்ட திரு.லாலாலஜபதிராய்  நாட்டின் விடுதலைக்குப் போராடிய முன்னணித் தலைவர்களுள் ஒருவர்.  பாலகங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே போன்ற  தலைவர்களின் சம சாலத்தில் வாழ்ந்தவர்.

    1907 ஆம் ஆண்டு அவரை ஆங்கில அரசு நாடு கடத்தியது. அதன்  காரணமாக அவர் சில ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தார்.

    1928 ஆம் ஆண்டு சைமன் குழுவின் வருகையைக் கண்டித்து லாகூரில்  நடைபெற்ற கண்டனப் பேரணிக்குத் தலைமை தாங்கிய அவரையும்,  ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானவர்களையும் காவல்  துறையினர் தடியடி நடத்திக் கலைத்தனர். இதில் திரு லாலா  லஜபதிராயும் படுகாயமுற்று சில நாட்கள் மருத்துவ மனையில் சிகிட்சை  பெற்றும் சிகிட்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

    திரு லாலா லஜபதிராயின் மரணம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும்  கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தடியடிக்கு உத்திரவிட்ட லாகூர் நகரின்  காவல் துறை  உயர் அதிகாரியான திரு சாண்டர்ஸை ராஜகுருவும்  பகத்சிங்கும் 17.12.1928 அன்று கொன்றனர். இது வரலாறு.

    திரு. லாலா லஜபதிராய் அமெரிக்காவில் தங்கியிருந்த போது 1915  ஆம் ஆண்டு “யுவபாரதம்” என்ற நூலை எழுதினார். இந் நூலின் இந்தியாவின் புராதன வரலாறு, முஸ்லிம்கள் ஆட்சி, வெள்ளையர்கள் இந்திய ஆட்சியைக் கைப்பற்றிய விதம், இந்திய தேசிய காங்கிரஸின் தோற்றம், அந்த இயக்கத்தின் துவக்க கால குறிக்கோள்கள் ஆகியன பற்றி விரிவாக எழுதியுள்ளார். இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட இந்த நூலுக்கு ஆங்கில அரசு தடைவிதித்ததுஇந்தியாவில் விற்பனைக்கு வந்த இந்நூலின் பிரதிகளை ஆங்கில அரசு பறிமுதல் செய்தது. பெரும் கிளர்ச்சிக்குப் பின் 1926 ஆம் ஆண்டு தான் இந்த நூலுக்கான தடை உத்தரவினை ஆங்கில அரசினர் விலக்கிக் கொண்டனர்.

   9.9.1937 அன்று இந்நூலை தமிழாக்கம் செய்து சென்னை மாநில முதலமைச்சராகப் பதிவி வகித்த திரு.குமாரசாமிராஜா வெளியிட்டார்.

      இந்நூலில், சுமார் 800 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியத் திருநாட்டை ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள திரு.லாலாலஜபதிராய்முஸ்லிம் ஆட்சி அந்நியர் ஆட்சி அன்றுஎன்று தன் ஆணித்தரமான வாதங்களால் நிறுவியுள்ளார். இது சம்பந்தமாக இந்நூலில் அவர் எழுதியுள்ள கருத்துக்கள் அப்படியே கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

     எனினும் இந்தியாவில் முஸ்லிம் ஆட்சியை அன்னிய ஆட்சி என்று சொல்வது சரியாகாது. முதன் முதலில் படை எடுத்து வந்த முஸ்லிம்கள் அன்னியர்கள் என்பதில் சந்தேகமில்லை. (நார்மானியரும், டேனியரும் முதல் முதலி்ல் இங்கிலாந்துக்கு வந்த போது அன்னியர்களாகவே இருந்தனர்) ஆனால் அவர்கள் இந்தியாவில் குடியேறி, இந்தியாவையே தங்கள் தாய் நாடாகக் கொண்டு, இங்கேயே வீடு வாசல்கள் கட்டி, கல்யாணம் செய்து குழந்தைகள் ஈன்று வளர்த்து வந்தார்களாதலினால் இந்த நாட்டின் சொந்தப் புதல்வர்களாக ஆகிவிட்டனர்.

  டில்லியிலும் பிற இடங்களிலும் இன்றைய தினம் உள்ள மொகலாயர்களையும், பட்டாணியர்களையும் போலவே அந்நாளிலிருந்து அக்பரும், ஔரங்கசீப்பும் இந்தியர்களே  யாவர். கிரேட் பிரிட்டனில் நார்மன் வில்லியம் (William The Conqueror)  ஆரஞ்சு வில்லியம் (William of Orange) இவர்களுடைய சந்ததியர்கள் எப்படி அன்னியர்களாக மாட்டார்களோ, அவ்வாறே இந்தியாவிலும் ஷெர்சாவும், இப்ராகிம் லோடியும் அன்னியர்களாக மாட்டார்கள். தைமூரும் காரிஷாவும் ஆமத்ஷா அப்தாலியும் இந்தியாவின் மீது படை எடுத்த போது அவர்கள் இங்கே இந்திய முஸ்லிம்களால் ஆளப்பட்ட இராஜ்யத்தையே தாக்கினார்கள். அவர்கள் ஹிந்துக்களுக்கு எவ்வளவு தூரம் பகைவர்களோ அவ்வளவு அம்முகம்மதிய அரசர்களுக்கும் பகைவர்களாயிருந்தனர்.

       பதின் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தி வரையில் இந்தியாவில் அரசியல் அதிகாரம் வகித்த முஸ்லிம்கள் இந்தியர்களேயாவார்கள். அவர்கள் பிறந்தது இந்தியாவில். மணம் புரிந்தது இந்தியாவில். அவர்கள் இறந்ததும் புதைக்கப்பட்டதும் இந்தியாவிலேயே இந்தியாவில் அவர்கள் வசூலித்த வரிப்பணத்தின் ஒவ்வொரு காசும் இந்தியாவிலேயே செலவழிக்கப்பட்டதுஅவர்களது சைன்யமோ முழுவதும் இந்திய சைன்யமாகும். ஹிந்துஸ்தானத்துக்கு வெளியிலிருந்து புதிய குடும்பங்கள் வந்து இந்தியாவில் குடியேறுவதற்கு அவர்கள் அனுமதித்தார்கள். ஆனால் இந்தியாவிலேயே நிலையாகத் தங்கி இதையே தங்கள் தாய் நாடாகக் கொள்ள விருப்பமில்லாதவர்களை அவர்கள் உத்தியோகங்களில் அமர்த்தியது மிக அபூர்வமாகும். ஹி்ந்துக்களிடம் அவர்களுக்கு விரோத பாவம் ஏதேனும் இருந்திருப்பின், அது சமய சம்பந்மானதேயல்லாமல் அரசியல் துறையைச் சார்ந்ததன்று. பிறப்பிலிருந்தே முஸ்லிம்களாயிருப்போரைக் காட்டிலும், புதிதாக அம்மதத்தைத் தழுவியவர்களுக்குச் சில சமயம் விஷேச சலுகையும் காட்டப்பட்டது. அக்பர் இந்த மத வேற்றுமையை அடியோடு தொலைத்து விட்டார்.

       ஆனால் இந்திய முஸ்லிம் அரசர்களுக்குள்ளே  மிகுந்த மதவெறி பிடித்தலும் கூட தற்போது இந்தியாவை ஆளும் பிரிட்டிஷாரைப் போல் சாதிக் கர்வமும், சுதேசிகளுடன் கலந்து பழகாத குறுகிய மனப்பான்மையும் கொண்டிருக்கவில்லை முஸ்லிம் ஆட்சியின் கீழ் சாதிப் போராட்டம் எப்போதேனும் தலை காட்டிற்றென்றால் அது ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் எழவில்லை. முஸ்லிம்களுக்குள்ளேயே அப்போராட்டம் ஏற்பட்டது. துக்ளக்களுக்கும், பட்டாணியருக்கும் ஏற்பட்ட போராட்டங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

      ஷெர்ஷா, அக்பர், ஜிகாங்கீர், ஷாஜஹான் முதலியோர் போன்ற மன்னர்களின் ஆட்சியில் அரச குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு அடுத்த படியாகப் பெரிய உத்தியோகப் பதவிகள் எல்லாவற்றுக்கும் ஹிந்துக்களே உரிவர்களாயிருந்தனர். அவர்கள் மாகாண அதிபதிகளாகவும், சைன்யங்களின் தளபதிகளாகவும், ஜில்லா அதிகாரிகளாகவும் பதவி வகித்திருக்கின்றனர். சுருங்கக் கூறினால் அரசியல்  துறையிலோ, சமூகத் துறையிலே ஹிந்து முஸ்லிம்களுக்குள் எவ்வகை வேற்றுமையும் பாராட்டப்படவில்லை. அரசியலையும், பொருளாதாரத்தையும் பற்றிய வரையில் ஹிந்து அரசைப் போலவே முஸ்லிம் அரசும் சுதேச ஆட்சியேயாகும்

   பொது ஜனங்களை நிராயுத பாணிகளாக்க முஸ்லிம்கள் முயன்றது கிடையாது. ஆயுதங்களின் உற்பத்தியையோ, இறக்குமதியையோ அவர்கள் தடை செய்தது இல்லை. அரேபியா, பாரசீகம், அல்லது ஆப்கானிஸ்தானிலிருந்து அவர்கள் உத்தியோகஸ்தர்களை கொண்டு வரவும் இல்லை. லங்காஷயர் தொழில்களைப் போல் அவர்கள் பாதுகாக்கவேண்டிய அன்னிய நாட்டுத் தொழில் எதுவுமில்லை. எனவே இந்தியாவில் செய்த சாமான்களுக்கு எதிர்வரி விதிக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படவில்லை.

        அவர்கள் வந்த போது தங்களது சொந்த பாஷையையும், இலக்கியத்தையும் தங்களுடன் கொண்டு வந்தது உண்மையே. சிறிது காலத்திற்கு அவர்கள் அரசாங்க காரியங்களை எல்லாம் தங்கள் சுய பாஷையிலேயே நடத்தியிருக்கலாம். ஆனால் விரைவிலேயே அவர்கள் புதிய இந்திய மொழி ஒன்றை ஏற்படுத்திக்கொண்டார்கள். உருது அல்லது ஹிந்துஸ்தானி என்று தற்போத வழங்கும் அப்புதிய மொழி அடிப்படையில் சுத்த இந்தி மொழியே ஆகும்.  பாரசீகம் அல்லது ஆப்கானிஸ்தானத்தி்ன் தொழிலாளி வகுப்பாரின் நன்மை குறித்து இந்திய முஸ்லிம் மன்னர்கள் எவ்விதத்திலும் கவலை கொண்டிருக்க வில்லை. வெளிநாட்டினர் எவரேனும் அவர்களுடைய ஆதரவைப் பெற விரும்பினால் அவர்கள் முதலில்இந்தியாவுக்கு வந்து குடியேற வேண்டும். எனவே முஸ்லிம்களின் அரசாங்கம் இந்திய அரசாங்கமேயன்றி ஒரு நாளும் அன்னிய அரசாங்கம் அன்று”.

          முஸ்லிம் மன்னர்கள் அந்நியர்கள் நம்முடைய பண்பாடு கலாச்சாரத்தை அழித்தவர்கள் என்று பிரச்சாரம் செய்து வரும் சங் பரிவாரங்களுக்கு தக்க பதில் அளிக்கும் விதத்திலேயே திரு.லாலா லஜபதிராயின் கருத்துக்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் மன்னர்களின் ஆட்சிக்குப்பின்னர் (மொகலாயர்களின் ஆட்சிக்குப் பின்னர்) இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆங்கிலர்களின் ஆட்சியை ஒப்பு நோக்கியே, திரு.லாலா லஜபதிராய் இந்த புத்தகத்தில் முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி பற்றி கருத்துத் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

2019 டிசம்பர்