மக்களின் ஏகோபித்த ஆதரவு காரணமாக, அன்றய திரைப்படங்கள் வருடக்கணக்கில் ஓடின ஆனால் மக்கள் ஆதரவு இருக்கிறதோ, இல்லையோ இன்றைய சின்னத்திரை தொடர்கள் வருடக் கணக்கில் ஓட்டப்படுகின்றன. ஆமை வேகம், நத்தை வேகம் என்பார்களே அதையும் விட மிகக் குறைவான வேகத்தில் இத் தொடர்கள் நகர்கின்றது. ஆரம்பக் கதை என்ன என்பது தொடர் முடியும் வரை மறந்து போகும் இயக்குநர்கள்.. பார்க்கும் மக்களின் நிலையும் இதுதான்.
கதை அம்சம் இருக்கிறதா? என்று பார்த்தால் அரைத்த மாவையே திரும்பத்திரும்ப அரைக்கிறார்கள். ஏற்கனவே திருமணமான பெண் வேறு ஒருவருடன் ஓடி விடுகிறாள். ஆனோ, பெண்ணோ கள்ள உறவு வைத்திருப்பது எனப்பல வக்கிர உணர்வுகளே தொடர்முழுவது மூலக்கதையாக உலா வருகிறது.
இப்படியான கதைகள் சினிமாவில் இல்லையா? என்ற கேள்வி எழாமலில்லை. இருக்கிறது. ஆனால் அதன் ஓட்டம் இரண்டரை மணித்துளிகளில் முடிவுக்கு வந்து விடுகிறது. அதன் தாக்கம் குறைவுதான். ஆனால் சின்னத்திரை நாடகங்கள் வருடம் முழுவதும் நீழுவதால் அதன் கருவோட்டம் மக்களின் குறிப்பாக பெண்களின் மனதில் ஆளப்பதிந்து விடுகிறது. சிந்தனையை ஒரு சேர கட்டிப்போட்டது போல் அவர்களின் எண்ணம் அதிலேயே உறைந்து போய்விடுகிறது. அதன் பின்விளைவுகளால் பாதிக்கப்படுவது ஆண்வர்க்கமே. இது தான் நிதர்சனமாக உண்மை.
தொலைக்காட்சிப் பெட்டிகள் நமது வீடுகளின் வரவேற்பு அறைகளில், முன் வீடுகளில் வந்து விட்டதால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அதனைப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகின்றது. “நேரப்போக்குக்கு வேறு என்ன செய்வது” என்ற சமாளிப்பு வேறு. இத் தொடர்களால் நமது மனம் கெடுகிறது. பொன்னான நேரம் பாழாகிறது. வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் போக்கிடமே இந்தத் தொடர்கள் தான். பல பெண்கள் சமையல் பணிகளைக் கவனிப்பது கூட இத் தொடர்களின் விளம்பர இடைவெளியின் போது தான் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை தற்போது உள்ளது. காலை 11 மணிக்குத் துவங்கி இரவு 10.30 மணிவரை அனைத்து தொலைக்காட்சிகளிலும் சலித்துப் போகும் அளவுக்குத் தொடர்கள்.
நல்ல சமூகம் சார்ந்த கதையினைப் படமாக்கிட பல சின்னத்தரை தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். மக்களிடம் சொல்வதற்கு ஏற்ற வரலாற்று நிகழ்வுகள், சமூக அவலங்கள், வாழ்க்கைப் போராட்டங்கள் எனப் பல நல்ல அம்சங்கள் இருந்த போதிலும் அவற்றை சின்னத்திரை தொடர்களின் கதை ஆசிரியர்கள் கண்டு கொள்வதில்லை. மக்கள் ஆதரவு இல்லாவிட்டால் விளம்பரம் கிடைக்காதே என்ற ஆதங்கமே இதற்கு காரணமாகும். இந்நிலை மாறிட வேண்டும். நல்ல தொடர்கள் வரவேண்டும். அதே நேரத்தில் அத்தொடர்களைப் பார்த்து ஆதரவு அளிக்கும் வண்ணம் மக்களின் இரசனையிலும் மாற்றம் நிகழ வேண்டும்.
இந்த இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தால் நன்மை பயக்கும்.
இந்த இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தால் நன்மை பயக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக