6 செப்டம்பர், 2012

தமிழ் ஈழமும் முஸ்லிம்களும் - பகுதி 5


கிழக்கு வடக்கு மாகாண முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் பெரும் பாதிப்பிற்கு உள்ளான போது அவர்களது அவல நிலையினை படம் பிடித்துக் காட்டும் விதமான அந்நாட்டுக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் எழுதிய ஒரு கவிதையைக் கீழே கொடுத்துள்ளேன்.

“உங்கள் வீட்டையே திருடிக் கொண்டோம்
உங்கள் பிள்ளைகளின் உணவைப் புசித்தோம்
உங்கள் தொழுகைப் பாயில் புணர்ந்தோம்
மீசான் கட்டையில் அடுப்பு மூட்டினோம்
எச்சில் கைகளைத் துடைப்பதற்காக
உங்கள் புனித நூல் களைக் கிழித்தோம்
பாங்கொலி இன்றி முடிந்த அவ்விரவில்
தேவதைகள் தொலைந்து போயின”

விடுதலைப் புலிகளின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான கிழக்கு மாகாண முஸ்லிம்கள், சுய பாதுகாப்பில் ஈடுபட வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஒவ்வொரு ஊரிலும் முஸ்லிம் இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டக் குழுக்களை நிறுவினர். முஸ்லிம்களைப் பாதுகாக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டனர். இவர்களுக்கு இலங்கை அரசு ஆயுதங்களை வழங்கியது. ஊர்க்காவல்  படையிலும் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் சேர்ந்து பணியாற்றினர். இதன் பின்னர் தான் முஸ்லிம்களின் மீதான விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் குறையத் தொடங்கின.
இன்னொரு வரவேற்கத்தக்க திருப்பமும் கிழக்கு மாகாண முஸ்லிம்களிடையில் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் தாக்குதல்களைச் சமாளிக்க ஒன்றுபடுவதன் தேவையை இம்மக்கள் உணர்ந்தனர். அதன் காரணமாக உருவானதுதான் “இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்” என்ற அமைப்பு. உருவான சில ஆண்டுகளிலேயே இந்த அமைப்பு கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மிகப் பெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அக்கரைப்பற்று, சம்மாந்துரை, கல்முனை, காத்தான்குடி, எறாவூர், வாழைச்சேனை, ஒட்டமாவடி, மூதூர், சாய்ந்த மருது ஆகிய இடங்களில் இந்த இயக்கத்திற்குப் பெரும் ஆதரவு கிட்டியது. ஜனாப் அஷ்ரப் இந்த இயக்கத்தின் பெருந்தலைவராக விளங்கினார். (இவரும் விடுதலைப்புலிகளால் பின்னர் கொல்லப்பட்டார்) இலங்கையில் உள்ள சிங்கள அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சியிலும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பங்கு பெற்று வருகிறது. இலங்கையில் போர் ஓய்ந்துள்ள நிலையில் இனி செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிச் சிறிது ஆராய்வோம். தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட இலங்கை அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்குவதன் மூலம் பிரச்னைகளை ஓரளவு தீர்க்க முடியும். இதற்கு கிழக்கு, வடக்கு மாகாணங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் உடன்படவே செய்வர்.
தனி ஈழத்தை ஆதரிக்கா விட்டாலும், தமிழர்கள் நடத்தும் உரிமை போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு அளிக்க முஸ்லிம்கள் தயாராகவே உள்ளனர். தமிழர்களுக்கும், தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தற்போது நிலவிவரும் தப்பெண்ணங்களைத் தீர்க்க தமிழர் தலைவர்கள் உண்மையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முஸ்லிம்களை சம்மாக நடத்தத் தயங்குவது, அவர்களின் தனித்துவத்தை ஏற்க மறுப்பது போன்ற கொள்கைகளைத் தமிழ் அமைப்புகள் முற்றாகக் கைவிட வேண்டும். விடுதலைப்புலிகள் போன்ற பாசிச மனப்பான்மை கொண்ட போராளி இயக்கங்களைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். இது போன்ற அமைப்புகளால் தமிழர்களுக்கு விளைந்திட்ட கேடுகளே மிகுதி. நன்மைகள் குறைவு என்ற உணர்வு தமிழ் மக்களிடையே ஏற்பட வேண்டும். ஜனநாயக முற்போக்கு சக்திகளே தமிழ் அமைப்புகளின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக ஆயுதப் போராட்டங்கள் மூலமே தமிழர் பிரச்னைகளைத் தீர்க்க இயலும் என்ற சிந்தையிலிருந்து விடுபட வேண்டும்.
கிழக்கு, வடக்கு மாகாண முஸ்லிம்களைப் பொறுத்த அளவில் பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. விடுதலைப்புலிகளின் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் மறு வாழ்வுப் பணியில் இலங்கை அரசு ஈடுபட வேண்டும். புத்தளம் மாவட்டத்தில் உள்ள அகதி முகாம்களில் கடந்த இருபது ஆண்டுகளாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாண முஸ்லிம்களை வாக்குறுதி அளித்தபடி அவர்களின் சொந்த ஊரில், சொந்த வீட்டில் குடியமர்த்த இலங்கை அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேற்கோள் நூல்கள்
1.      வ.ஐ.ச.ஜெயபாலன் “தேசிய இனப்பிரச்னையும் இலங்கை முஸ்லிம்களும்”
2.    விக்டர் எழுதியுள்ள “முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்”
3.    டாக்டர் எஸ்.எம்.கமால் எழுதியுள்ள “முஸ்லிம்களும், தமிழகமும்”
4.    ஹிந்து ஆங்கில நாளிதழ் தேதி 28.12.2009
5.    தினத்தந்தி நாளிதழ் 18.11.2009
6.    சமரசம் ஜனவரி 16-31   2010 இதழ்

இந்த கட்டுரையினைப் படித்த இலங்கை நாவலாசிரியர் ஜனாப் ஆர்.முஹம்மது நௌஷாத் அவர்கள் விடுதலைப் புலிகளால் இலங்கை தமிழ் முஸ்லிம்கள் அடைந்திட்ட இழப்புகள் பற்றிய விரிவான குறிப்பு ஒன்றினை நமக்கு அனுப்பியிருந்தார். இதனை இலங்கையிலுள்ள மெஸ்ரோ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. வாசகர்களின் கவனத்திற்காக அந்தக் குறிப்புகளை அப்படியே கீழே கொடுத்துள்ளோம்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட இனரீதியான வன்முறைகளினாலும், அடக்கு முறைகளினாலும் வடக்கு கிழக்கில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் பல்வேறு பட்ட கோணங்களில் பாதிப்படைந்திருக்கின்றார்கள். இவற்றைத் தொகுத்து தருவதன் மூலம் ஆவணப்படுத்த விரும்புகின்றோம்.
1987இல் மூதூர் உதவி அரசாங்க அதிபர் படுகொலை, மூதூர் அகதி முகாம் மீது கோரத் தாக்குதல். 1987ஒக்டோபர் மூதூரில் 52 பேர்கள் கொலை, 138 பேர் படுகாயம் 20,000 பேர் அகதிகளாயினர். 300 வீடுகள், கடைகள், பள்ளிவாசல்கள், 4 பாடசாலைகள் சேதம் 1400 இலட்சம் ரூபா இழப்பு.
1987நவம்பர், ஏப்ரல் கிண்ணியா 35பேர்கள் கொலை, 138பேர் காயம். 22,000 பேர் அகதிகள், 200 வீடுகள், கடைகள்,5பள்ளிவாசல்கள், 3 பாடசாலைகள் சேதம். ரூபா.1100இலட்சம் இழப்பு.

ஏறாவூர்  - 1988 பெப்ருவரி, 5பேர் கொலை, 15பேர்கள் காயம், 1பள்ளிவாசல், 1பாடசாலை சேதம்.
காத்தான்குடி-1988 ஜனவரி, பெப்ருவரி-67பேர்கள் கொலை, 53பேர்கள் காயம். 17,000பேர் அகதிகளானர். 100 வீடுகள், கடைகள், 6பள்ளிவாசல்கள், 1பாடசாலை சூறையாடல், ரூபா 1100 இலட்சம் இழப்பு.
கல்முனை 1987 செப்டம்பர், டிசம்பர், 1988 ம ர்ச், 1989 ஏப்ரல், மே... 50பேர்கள் கொலை, 143பேர் காயம், 17,000 பேர்கள் ஒவ்வொரு தாக்குதலின் போதும் அகதிகளாயினர். 35 வீடகள் கடைகள், 12 பள்ளிவாசல், 1 அறபிக்கலாசாலை சேதம். ரூபா.11,000 இலட்சம் இழப்பு.
சாய்ந்த மருது, மாளிகைக்காடு, 1988 மார்ச்..... 17பேர் கொலை. 75பேர் காயம், 12,000 பேர்கள் அகதிகளானார்கள். 50வீடுகள், கடைகள் 1பள்ளிவாசல், 1 பாடசாலை சேதம். ரூபா.90இலட்சம் இழப்பு.
ஒட்டமாவடி 1987 டிசம்பர், 88பேர்கள் கொலை, 183 பேர்கள் காயம். 13,000 பேர்கள் அகதிகளானார்கள். 100 வீடுகள், கடைகள், 4 பள்ளிவாசல்கள் சேதம்.
சம்மாந்துறை 1989..... 21பேர்கள்படுகொலை, 126 பேர்கள் காயம், 32,000 பேர்கள் அகதிகளானார்கள். 627 வீடுகள், கடைகள் சூறையாடல், 3 பள்ளிவாசல்கள், 1 பாடசாலை தீவைப்பு, ரூபா.25,000 இலட்சம் இழப்பு.
1989 நவம்பர் 17.... காரைதீவில் வைத்து 43 பொலிசார் சரணாகதி அடைந்த நிலையில் படுகொலை அக்கரைப்பற்றைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் எம்.ஐ.அலிதுமான் படுகொலை.
இதற்கிடையில் தமிழ் ஆயுத அமைப்புகளுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் முரண்பாடுகளும் சந்தேகங்களும் அதிகமாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி டாக்டர் பதியுத்தீன் மஃமூத் தலைமையில் விடுதலைப்புலிகளுடன் 1988 ஏப்ரலில் சென்னையில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இவ்வொப்பந்தமானது அன்றைய முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி செயலாளர் நாயகமாக இருந்த எம்.ஐ.எம்.முஹிதீன், விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவரும் மத்திய குழு உறுப்பினருமான சதாசிவம் கிருஷ்ணகுமார்(கிட்டு) இருவரும் ஒப்பமிட்டிருந்தனர். இதில் நாம் நிகழ்த்துகின்ற உரிமைப் போரானது இலங்கை தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் சுதந்திரத்தினையும் சமத்துவத்தினையும், சுபிட்சமான வாழ்வையும் பெற்றுத் தருவதற்கான போராட்டமாகும். எமது தேசிய விடதலைப் போராட்டப் பாதையில் இன, மத, பிரதேச வேறுபாடுகளற்ற சகல மக்களினதும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். எமது போராட்ட இலக்கில் நாம் இழந்த நிலத்தை மீட்டெடுப்பதும், இருக்கும் நிலத்தைக் காப்பாற்றுவதும் அவசியமாகும். தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய மண்ணில் முஸ்லிம்களின் நிலம்தான் அதிகம் பறிபோய் இருக்கிறது. எனவே இழந்த மண்ணில் ஒர அங்குலத்தைக் கூட விட்டுக் கொடுக்காது மீட்பது என்ற எமது போராட்ட இலக்கானது முஸ்லிம்களின் உரிமைக் குரலையே முதன்மைப்படுத்துகின்றது. தமிழ் தேசிய இனத்துக்குள் தனித்துவமான கலை, கலாசாராம், பண்பாடுகளைக் கொண்ட இலங்கை வாழ் முஸ்லிம்கள் அச்சம், ஐயப்பாடுகளிலிருந்து கலை கலாசாரம், பண்பாடு மதம் போன்றவற்றை போற்றி வளர்க்கவும், பாதுகாக்கவும் அனைத்து உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் தமிழ் ஈழவிடுதலைப் புலிகளாகிய நாம் உத்திரவாதம் அளிக்கின்றோம் என்ற கூறிவிட்டு அவ்வொப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு நேர் மாறாகவே புலிகள் முஸ்லிம்களிடம் 1990 களில் நடந்து கொண்டனர். அத்துடன் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இனம் காணப்பட்ட 18அம்சங்களில் 1வது விடயம்.
1.இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமிழ் மொழியையே பேசுபவர்களாக இருப்பின் அவர்கள் வேறுபட்ட தனித்துவத்தைக் கொண்ட தமிழ் தேசியத்தினுள் உள்ளடங்கிய ஒரு இன்குழு என்பதையும், வடகிழக்கு மாகாணம் ஏனைய தமிழ் பேசும் மக்களது பாரம்பரிய தாயகமாகவுள்ளது போலவே முஸ்லிம்களது பாரம்பரிய தாயகமாக உள்ளது என்பதையும் ஏற்றுக் கொள்கின்றோம், எனக்கூறிவிட்டு 1990களில் ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாசாவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் காரணமாக விடுதலைப் புலிகள் 1989 மே தொடக்கம் 90 சூன் வரையிலும் ஆதிக்கம் செலுத்தினர். அப்போது ஒப்பந்தத்தில் ஏள்கப்பட்ட அனைத்து அம்சங்கங்களையும் உதாசீனப்படுத்தி தனித்தமிழ் தேசியத்தினுள் மேலாதிக்கம் செய்யப்பட்ட ஒரு இனமாக முஸ்லிம்கள் வாழ நரைப்பந்திக்கப்பட்டனர். பின் 1990 சூன் 12இல் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட யுத்தத்தின் பின் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளினால் பிரகடனப்படுத்தப்பட்ட இனச் சுத்திகரிப்பு, அழிப்பு யுத்தத்திற்கு பலியானார்கள். யாழ்ப்பாணம் சோனகத்தெரு தொடக்கம் பொத்துவல் வரை வாழ்ந்த முஸ்லிம்களும் இதில் அடங்கும் அவையாவன.
1990சூலை 14இல் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு நாடு திரும்பிய 65க்கும் மேற்பட்ட ஹஜ்ஜாஜிகளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒந்தாச்சிமடம் எனும் இடத்தில் வைத்து படுகொலை செய்தனர்.
1990 ஆகஸ்ட் 03ல் காத்தான்குடி பள்ளிசாலில் தொழுது கொண்டிருந்த 167 முஸ்லிம்களை வணக்க நிலையில் வைத்து விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட இராணுவத் தலைவர்களில் ஒருவராக இருந்த ரஞ்சித் அப்பா என்பவரின் தலைமையிலான குழு படுகொலை செய்தது.
1990 ஆகஸ்ட் 05ல் அட்டாளைச் சேனையில் 15முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1990 ஆகஸ்ட் 12ல் ஏறாவூர் சதாம் குசைன் கிராமத்தைச் சுற்றிவளைத்து தூக்கத்திலிருந்த முஸ்லிம்கள் 173பேரை படுகொலை செய்தனர். பொலநறுவை அழிஞ்சுப்பொத்தானை கிராமத்தில் நள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுடன், பச்சிளம் பாலகர்களையும் விட்டுவைக்காது புலிகள் படுகாலை செய்தனர்.
1990 ஆகஸ்ட் 12ல் சம்மாந்துரை கிராமத்தில் மாத்திரம் 1984 தொடக்கம் 1991 வரை 132 முஸ்லிம்கள் தமிழ் ஆயுதக்குழுக்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
30.01.1990ல் சிரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் எம்.வை.எம்.மன்சூர் அவர்கள் விடுதலைப் புலிகளால் பகிரங்கமாக சுட்டுக் கொல்லப்பட்டு அவரது ஜனாசா கூட வழங்கப்பட்டவில்லை.
1990 ஆகஸ்ட் 13ல் கொலனி முஸ்லிம்கள் மீது தாக்குதல் 5பேர் பலி, 1990 சூன் கல்முனை அக்கரைப்பற்று கொத்துவில், பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றி 200க்கும் மேற்பட்ட முஸ்லிம் பொலிசார் சரணாகதியடைந்த நிலையில் படுகொலை. 1990 சூலை 07ல் பொலநறுவை மாவட்ட புத்தூர் கிராம முஸ்லிம்கள் மீது தாக்குதல், 17பேர் கொலை, 200பேர் காயம், 500 பேர் அகதி.
1990 சூலை7ல் அக்கரைப்பற்றில் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த 58பேர் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டமை. 1990 ஒக்டோபர் 22-31 வரை மன்னார் மாவட்டத்திலிருந்து முஸ்லிம்கள் அனைவரும் பலவந்தமாக வெறுங்கையோடு வெளியேற்றப்பட்டனர். அகதிகள் 50,000, 1990 ஒக்டோபர்.முல்லைத்தீவு முஸ்லிம்கள் அனைவரும் பலவந்தமாக வெறுங்கையோடு வெளியேற்றப்பட்டனர். அகதிகளாக் கப்பட்டோர் 3000 பேர்கள்.
1990 நவம்பர் யார் முஸ்லிம்கள் அனைவரும் பலவந்தமாக வெறுங்கையொடு வெளியேற்றப்பட்டனர். அகதிகளானோர் 40,000 பேர் வடக்கில் பூர்வீக குடிகளான தமிழ் மக்களுடன் ஐக்கியமாகவும் அவர்களது போராட்டத்துக்கு ஏற்ற வித்த்திலும் தடையில்லாமல் இருந்த முஸ்லிம்களை ஜேர்மனி சரித்திரத்தில் வரும் ஹிட்லர் போல “முஸ்லிம்” என்ற இன அடையாளத்திற்காக மாத்திரம் தமது பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
1991 ஆகஸ்ட், சம்மாந்துறையில் 6பேர் கொலை, 1991 செப்டம்பர் பொலநறுவை பள்ளியகொடல்லயில் 16பேர் கொலை, 1991 ஜனவரி சூரத்தான்குடி கல்முறை பைசிக்கிள் குண்டுவெடிப்பு. 12பேர்கள் கொலை.
இச்சம்பவங்களின் பின்னர் இலங்கை வரலாற்றில் நீண்ட காலமாய் வழக்கத்தில் இருந்து வந்த தமிழ் பேசும் மக்கள் என்ற கருத்தியலை திட்டவட்டமாக முஸ்லிம்கள் நிராகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இச்சிந்தனை வடக்கு கிழக்கு முஸ்லிம்களை தமிழர்களின் ஆதிக்கத்துக்கும் அடங்கு முறைக்குமிடையெ சிறைப்படுத்தி வைப்பதற்கான ஒரு சொற்றொடர் என்பது அனுபவங்களினூடே நிருபிக்கப்பட்டது. மேலும் யாழில் செய்தது போல் இனச்சுத்திகரிப்பை கிழக்கில் செய்ய முடியவில்லை. இக்காலகட்டங்களில் தம் வாழ்நாளில் என்றுமே அறிந்திராத பெரும் உளவியல் தாக்கங்களுக்கு, முஸ்லிம் உட்பட்டனர். ஒவ்வொரு முஸ்லிமும் தான் முஸ்லிம் என்றே ஒரே காரணத்திற்காகவே கொல்லப்படுவோம் என உறுதியாக நம்பினார்.
இவ்வராற்றினூடே கடந்த காலங்களில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட இன அழிப்பு, இனச்சுத்திகரிப்பு பொருளாதார அழிவு, கலாசார பண்பாட்டு உளத்தாக்கங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கள் போன்றவற்றிலிருந்து சிங்கள இனவாத சக்திகள் தமிழ் மக்களை அடக்கியதற்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் கடந்த கால வடகிழக்கு முஸ்லிம்களின் வாழ்வும் இருப்பும் தமிழ் தேசியவாத சக்திகளினால் அடக்கி வைக்கப்பட்டது. சிங்கள இனவாதம் தமிழ் மக்களை நசுக்குகின்றது என்ற காரணத்துக்காக ஆயுதம் ஏந்திய தமிழ் குழுக்கள் திட்டமிட்டு சிறுபான்மையான முஸ்லிம்களை நசுக்கிய வரலாறு, முஸ்லிம்கள் தம்மைப் பாதுகாப்பதற்கான ஒரு அரசியல் அதிகாரப் பிராந்தியத்தைக் கோருவதற்கான நியாயமான அடித்தளத்தைக் கொண்டிருக்கிறது. இதுவே வடக்கு கிழக்கில் நீடித்த ஐக்கியத்தையும், சமூக வாழ்வையும் உறுதிப்படுத்த முடியும்.
இது மெஸ்றோ நிறுவனம் ஒலுவில் நடாத்திய “வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் எதிர்காலமும், இளைஞர்களின் பங்களிப்பும்” எனற தலைப்பிலான கருத்தரங்கின் போது வெளியிடப்பட்டது. 11.03.2002 வெளியீடு . மெஸ்றோ நிறுவனம்.

முடிந்தது.
                                   
மீண்டும் இன்னொரு படைப்போடு சந்திப்போம்.

கருத்துகள் இல்லை:

2019 டிசம்பர்