டிசம்பர் 6 இது துக்க நாளல்ல
ஆகஸ்ட் 15 போல, ஜனவரி 26 போல டிசம்பர் 6 ம் போலீஸ் ராணுவ கெடுபிடிகளுக்கான தினமாக ஆகிவிட்டது. தீவிரவாதிகளின் சதி அம்பலம் என்று பல இடங்களில் ஐயத்தில் கைது செய்தவர்களையெல்லம் தீவிரவாதிகளாக சித்தரிப்பார்கள். தொடர்வண்டி நிலையங்கள், பேரூந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் இன்னும் மக்கள் கூடும் பொது இடங்களெல்லாம் பரபரப்பாக கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு மக்கள் பதட்டத்தில் இறுத்திவைக்கப்படுவார்கள். ஹிர்க்கத், முஜாஹிதீன் பொன்ற புதுப்புது பெயர்களில் அமைப்புகளை தொடங்க போலீசே மக்களுக்கு கற்றுத்தரும். ஆண்டு தோறும் ஏன் இப்படி மக்கள் பயமுறுத்தப்படவேண்டும்?
மறுபக்கம் இஸ்லாமிய அமைப்புகள் டிசம்பர் 6 ஐ ஒரு துக்க நாளாக கடைப்பிடிக்க மக்களுக்கு அறிவுறுத்துகின்றன. அடையாளத்திற்காக ஏதேதோ முழக்கங்கள், போராட்டங்கள். ஒரு சடங்கைப்போல பாபர் மசூதி இடிப்பை நினைவு படுத்திவிட்டு ஓய்ந்து விடுகின்றன. 1992 டிசம்பர் 6 க்கு மறு வாரத்தில் தேனீர்க்கடைகளில் பேசப்பட்ட உண்மைகளை கண்டு பிடிக்க 8 கோடிகளையும் 17 ஆண்டுகளையும் செலவு செய்த ஓர் அறிக்கை(லிபரான்) நாடாளிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக நாளிதழ்களில் வெளியிடப்பட்டதற்காக இரு அவைகளுமே அமளியால் அதிர்ந்திருக்கும் நிலையில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றங்களில்(!) தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு வழக்கை விரைந்து முடிவுக்கு கொண்டுவர இவர்களால் மக்களை திரட்டி சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுத்திருக்க முடியாதா?
பாபர் மசூதி இடிப்பு என்பது முஸ்லீம்களை மட்டும்குறிவைத்து தொடுக்கபட்டதல்ல. பௌத்தம் முதல் சமணம், சாருவாகம், சாங்கியம் ஈறாக பல மதங்களும் இனக்குழுக்களும் தத்துவங்களும் இது போன்ற தாக்குதல்களுக்கு உள்ளாகியிருப்பதை இந்திய வரலாற்றுப்பக்கங்களில் தெரிந்துகொள்ளலாம். இவற்றின் தொடர்ச்சி தான் பாபர் பள்ளியும், மதுரா காசி என்று பேசுவதும். இது மதங்களின் மீதான தாக்குதலல்ல, உழைக்கும் மக்களின் மீதான தாக்குதல்.
நாள் தோறும் போராட்டங்கள் வரட்சி முதல் வெள்ள நிவாரணம் வரை; அரிசி முதல் குடி நீர்வரை; அடிப்படை சுகாதாரம் முதல் கொடிய நோய்கள் வரை தினமும் போராட்டச்செய்திகள். தூங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் மாடாய் உழைத்தாலும் வாழ்க்கைக்கு போதாத சலிப்பிலும் விரக்தியிலும் இருக்கும் மக்களை குண்டு வெடிப்பு, தீவிரவாதம் என போக்குக்காட்டி போலியான தேசப்பற்றை கட்டமைத்து மக்களை தங்கள் வாழ்க்கையின் மெய்யான தாக்கத்தை, அதன் காரணிகளை கண்டு விழிப்புணர்வு கொள்வதை தடுப்பதைத்தான் இந்த பாதுகாப்புக்கெடுபிடிகள் மேற்கொள்கின்றன.
எந்தப்பிரச்சனையையுமே அதற்கான தெளிவான் காரணங்களை கண்டு அவைகளை தீர்க்கும் நோக்கில் தளராத போராட்டங்களை முன்னெடுக்காத வரை அப்பிரச்ச்னைகள் தீருவதில்லை. அந்தவகையில் வர்க்க அடிப்படையில் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்துப்போராடாமல் டிசம்பர் 6 ஐ ஒரு கருப்பு தினமாக கொண்டாடுவதால் ஒரு பலனுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக