உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க 5ந்தாவது மாநில மாநாடு பிப்ரவரி 21 வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக நடந்து முடிந்தது.
மாநாட்டிற்கு முதுபெறும் எழுத்தாளர் தி.க.சி (தி.க.சிவசங்கரன்) அவர்கள், தினமணி நாளிதழின் ஆசிரியர் திரு கே.வைத்தியநாதன் அவர்கள், திரு.தீபநடராசன், திரு. கலாப்பிரியா, திரு.கழனியூரான், திரு. பூ.திருமாறன், இலங்கையைச் சேர்ந்த சிற்றிதழ் ஆசிரியர்களான அந்தனி ஜீவா, த.கோபாலகிருஷ்ணன், சேயன் இப்ராகிம் இன்னும் ஏராளமான சிற்றிதழ்களின் ஆசிரியர்கள், வாசகர்கள் என இலக்கிய கூடல் இனிதே நடந்தேறியது.
ஒரு கடிதமடல் கண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்ததோடு மன மகிழ்ச்சியோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த மாநாட்டின் வெற்றிக்கு வித்திட்ட தினமணி ஆசிரியர் திரு.கே.வைத்தியநாதன் அவர்களுக்கு இந்த மாநாட்டு அமைப்பின் மூலம் நன்றி கூறிக்கொள்கிறோம். தானும் ஒரு சிற்றிதழ் ஆசிரியராக தனது பத்திரிக்கை உறவை ஆரம்பித்த நெகிழ்ச்சியான அந்த காலம் முதல் சிற்றிதழ்களின் பங்களிப்பு வெகுசன பத்திரிக்கையால் தரமுடியாது என்பதை ஒப்புக்கொள்வதாக கூறினார்.
“சாப்பாட்டிற்கு ஏதாவது கிடைக்காதா என ஏங்கியவாரு காட்டு வழியே ஒருவன் தனது பயணத்தில் இருக்கிறான், அவன் பசிக் கொடுமையின் உச்சத்தில் இருக்கிறான். அந்த வேளையில் அவனை ஒரு கரடி துரத்துகிறது. உயிரைக்காப்பாற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் வேகமாக ஓடுகிறான் அதே வேகத்தில் செங்குத்தான மரத்தின் மேல் ஏறிவிட்டான் மரத்தின் உச்சியை அடைந்து விட்ட பெருமூச்சில் கரடியிடமிருந்து தப்பித்து விட்ட சந்தோசப்பட்ட அதே வேளையில் இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. மரத்தின் மேல் இருந்த மலைப்பாம்பு கண்டு வேறொரு மரத்திற்கு தாவுகிறான் அங்கே இரண்டு மூன்று பச்சைபாம்புகள், அங்கிருந்து இன்னொரு மரத்திற்கு தாவுகிறான் அங்கு அடத்தியாக இருந்த தேன்கூட்டை இவன் பிடித்ததால் கலைந்து போனது. பல ஆயிரக்கணக்கான தேனிக்கள் இவனை பந்தாடிவிட்டது. அந்த வேதனையில் இருக்கும் வேளையில் அந்த தேன்கூட்டில் இருந்து ஒரு துளி தேன் இவன் உதட்டில் படுகிறது அதை தன் நாவால் லாவகமாக சுவைக்கிறான் அந்த தேன் போல் தான் இந்த சிற்றிதழ்கள்.” என்கிற கதையோடு சேவைமையம் ஒன்றை சோர்வில்லாமல் நடத்தி வரும் பூ.திருமாறன் பேசத்துவங்கினார்.
கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியதுவம் கொடுத்து வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இன்றைய வெகுசன இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இலக்கியம் என்பதை ஒப்புக்காக மட்டுமே இடம் கிடந்தால் திணிக்கிறார்கள். காலப்போக்கில் வாசிக்கும் பழக்கம் நம்மை விட்டு போய்விடுமோ என்று கூட அஞ்சத்தோன்றுகிறது. இது போன்ற சிற்றிதழ்கள் இன்னும் நிறைய வரவேண்டும் என்ற ஆசையை வைத்து நிறைவு செய்தார் திருமாறன்.
இரண்டு விரல்களால் எழுத்திக்கொண்டிருந்த காலம் போய் பத்து விரல்களால் எழுதும் காலம் வந்து விட்டது. ஆகவே இணையத்தள சிற்றிதழ்களையும் நாம் ஒன்று திரட்ட வேண்டும். எதில் எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல என்ன எழுதுகிறோம் என்பதுதான் முக்கியம். நல்ல எழுத்துக்கள் பேசப்படும். இது கரிசல் எழுத்தாளர் கழனியூரான் அவர்களின் வேண்டுகோளாக இருந்தது.
தினமணி நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்கள் பேசும்போது சிற்றிதழ்களின் அயராத இலக்கிய பணியை, அதன் தாக்கத்தின் வீரியத்தையும் பற்றி தெளிவாக உணர்த்தினார். விளம்பரம் சார்ந்து வரக்கூடிய பத்திரிக்கைகள் எந்தக் கொள்கைக்காக முன்னெடுத்துச் செல்லவேண்டுமோ, அதை அடகு வைக்கும் நிர்பந்தமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவர். தான் ஆரம்பத்தில் சி்ற்றிதழ் ஆசிரியராக இருந்த அந்த சூழ்நிலையை விளக்கினார். அவர்களுக்கு இருக்கும் அந்த எழுத்து துணிச்சல் வெகுசன பத்திரிக்கைகளுக்கு இருக்காது என்பதை ஆணித்தரமாக கூறினார்.
இலக்கிய உலகில் சிற்றிதழ்களின் வளர்ச்சி மிகவும் அவசியம் மிகத் தரமான படைப்புகளுடன் இன்னும் நிறைய சிற்றிதழ்கள் வரவேண்டும். தொடர்ந்து அவை வரவேண்டும். சிற்றிதழ்களின் மூலம் வளர்ந்தவர்கள் தான் இன்றைய பெரும் எழுத்தாளர்களாக இலக்கிய வானில் உலாவந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
உதசிசங்கத்தின் தலைவர் வதிலை பிரபா முன்வைத்த தீர்மானத்தில் ஒன்றான சிற்றிதழ் எழுத்தாளர்களுக்கும் கலைமாமணி விருது கொடுக்கவேண்டும் என்பதை மேற்கோள்காட்டி பேசிய தினமணி ஆசிரியர் நமக்கு இந்த விருதுகள் தேவையில்லை. முகம் தெரியாத வாசகர்கூட்டம் நமக்கு தரும் அங்கீகாரம் நோபல் பரிசுக்கு சமம். வழங்குவது கலைமாமணி விருது அல்ல சிரிப்பு நடிகர்களுக்கும், கவர்ச்சி நடிகர்களுக்கும் மத்தியில் நமது இலக்கியம் சிதறவேண்டாம். என்றார்.
நிகழ்ச்சியில் ஏராளமான சி்ற்றிதழ்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இலக்கியச்சாயலுடன் நடைபெறும் இம்மாதிரியான நிகழ்ச்சிக்கு பொதுவாக பார்வையாளர்கள் குறைவுதான் என்றாலும் இந்த நிகழ்ச்சிக்கு சற்று அதிகமாகவே பார்வையாளர்கள் வந்திருந்தனர். இதுபோன்ற நிகழ்வுகள் இனிஒரு சந்தர்பத்தில் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆவலாக இருந்தது.
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக உலகத்தமிழ் சி்ற்றிதழ்கள் சங்க 5வது மாநில மாநாட்டின் பொதுக்குழு அமர்வு நடைபெற்ற போது எடுத்தபடம்.
மாநாட்டு நிகழ்ச்சியின் துவக்கத்திற்கு முன்பாக மூத்த எழுத்தாளர் திரு.தி.க.சி அவர்களுடன் தினமணி நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன் மற்றும் இலங்கை பத்திரிக்கையாளர்கள் த.கோபாலகிருஷ்ணன், அந்தனி ஜீவா மற்றும் வாசகர்கள்.
மூத்த எழுத்தாளர் திரு.தி.க.சி அவர்களுக்கு பாரதிஇலக்கிய விருது வழங்குகிறார் தினமணி ஆசிரியர் அவர்கள்.
நல்லூர் முரசு நிர்வகஆசிரியரும், மாநாட்டு அமைப்பாளருமான திரு.ஜாகிர்உசேன் தினமணி ஆசிரியரிடமிருந்து நினைவுப்பரிசு பெறுகிறார்.
நல்லூர் முரசு பொறுப்பாசிரியரும், மாநாட்டு அமைப்பாளருமான திரு.சொக்கம்பட்டி ரஹீம் தினமணி ஆசிரியரிடமிருந்து நினைவுப்பரிசு பெறுகிறார்.
மாநாட்டு நினைவாக குறும்பட இயக்குநர் அ.செல்வதரன், இலங்கை பத்திரிக்கையாளர் கோபாலகிருஷ்ணன், நல்லூர்முரசு பொறுப்பாசிரியர் சொக்கம்பட்டி ரஹீம், உலகசிற்றிதழ்கள் சங்கத்தின் செயலாளர் சொர்ணபாரதி, பொருளாளர் நந்தவனம் சந்திரசேகரன், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், உ.த.சி.சங்கத்தின் தலைவர் வதிலை பிரபா, நல்லூர் முரசு நிர்வாக ஆசிரியர் எம்.எஸ்.ஜாகிர் உசேன்.
மாநாட்டு நிகழ்ச்சியில் தி்.க.சி அவர்களின் ஏற்புரை .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக