9 பிப்ரவரி, 2010

நல்லூர் முரசு

விலைவாசி உயர்வு - தீர்வு என்ன?

       உணவுப் பொருட்களின் விலை கடந்த சில மாதங்களில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும் பருப்பு, சீனி போன்ற பொருட்களின் விலை இரு மடங்கு, மூன்று மடங்கு என உயர்ந்துள்ளது.
   உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக சமாதானம் கூறப்பட்டாலும், விவசாய நாடான இந்தியாவில் விலை உயர்ந்திருப்பது சற்று கவலை தரும் அம்சமே.
உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு, விளைச்சல் பற்றாக்குறையே காரணம் என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. பருவநிலை மாற்றம், காலம் தப்பிப் பெய்யும் மழை, வறட்சி, விளை நிலங்களின் பரப்பளவு குறைவு என பலகாரணங்கள் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்திற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.
        உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு ஊக வணிகம் தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் இதில் முழு உண்மை இருப்பது போல் தோன்றவில்லை. ஏனெனில் ஊக வணிகத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள பருப்புவகைகளின் விலை இரண்டு மடங்குகள் உயர்நதுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பின் உண்மையான காரணம் தான் என்ன? ஆராய்ந்து பார்த்தால் ஒரு உண்மை பளிச்செனத் தெரியும். தற்போது நமது நாட்டில் விவசாயம் ஒரு லாபம் தரும் தொழிலாக இல்லை. பல்வேறு காரணங்களால் விவசாயம் ஒரு நட்டம் தரும் தொழிலாகவே மாறிவிட்டது. நன்றாக மழை பெய்து அதிகமான விளைச்சல் ஏற்பட்டால், விலை அதல பாதாளத்தில் விழுந்து விடுகிறது. அப்போதும் விவசாயிக்கு நட்டம்தான். நன்றாகப் பயிர்கள் வளர்ந்து அறுவடை செய்யும் நேரத்தில் அடை மழை பெய்து விட்டால் பயிர்கள் பெருமளவு சேதமடைந்து விடுகின்றன. அப்போதும் விவசாயிக்கு நட்டம்தான். எனவே விவசாயிகள் போட்ட முதலையும் இழந்து அரசிடம் நிவாரணம் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலை காரணமாக தொழிலில் நட்டம் ஏற்பட்டு வாங்கிய கடனை அடைக்க முடியாத விவசாயிகள் பலர் ஆந்திராவிலும், மகாராஷ்டிராவிலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
       விவசாயத் தொழிலுக்குத் தற்போது ஆட்கள் கிடைப்பதில்லை. வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், உள்நாட்டில் கட்டுமானத் தொழிலின் அபிரிதமான வளர்ச்சி, கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்றவை காரணமாக நாற்று நட்டல், களை பறித்தல், அறுத்தல் போன்ற விவசாயப் பணிகளுக்குப் போதிய ஆட்கள் கிடைப்பதில்லை. கிடைக்கின்ற ஆட்களுக்கு அதிகக் கூலி கொடுத்து உற்பத்தி செலவும் கூடிவிடுகின்றது. இதுபோன்ற நெருக்கடிகள் காரணமாக பல சிறு விவசாயிகள் தங்களது நிலங்களை எதையும் பயிரிடாது தரிசாகப் போட்டுள்ளனர். நகர்ப்புறங்களில் உள்ள பல விவசாயிகள் நகரை ஒட்டியுள்ள தங்களது விவசாய நிலங்களை வீட்டு மனைகளாகப் போட்டு விற்று விட்டனர். பத்துப் பதினைந்து ஆண்டுகள் விவசாயம் செய்தாலும் கிடைக்காத வருமானம் வீட்டு மனைகளாக விற்கும் போது அவர்களுக்கு ஒரு சேரக்கிடைத்துவிடுகிறது. எனவே விவசாய நிலப்பரப்பு கடந்த இருபது ஆண்டுகளில் படிப்படியாகக் குறைந்து உணவுப் பொருட்களின் உற்பத்தியும் குறைந்து விடுகிறது.
    இந்நிலையில், விவசாயிகளுக்கு கட்டுபடியாகக் கூடிய கொள்முதல் விலையினை வழங்க அரசு தயக்கம்காட்டுகிறது. இதற்குக் காரணம் கொள்முதல் விலையை உயர்த்தினால் பொருட்களின் விற்பனை விலையும் கூடி சாதாரண மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சமே காரணமாகும்.
     ஒரு உதாரணம் பார்ப்போம் தமிழக அரசு தற்போது ஒரு குவிண்டால் நெல்லுக்கு (100கிலோ ரூ1050/- விலை நிர்ணயம் செய்து நெல்ல விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்குகிறது. 100 கிலோ நெல்லை அரியாக்கினால் 60 கிலோ கிடைக்கும் எனவே 1 கிலோ அரியின் அடக்க விலை ரூ.17.50 என ஆகிறது. அரசு நிர்ணயித்த விலையை ஒட்டியோ, அல்லது சற்று அதிகமாகவோ தான் மொத்த வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்குவார்கள் இதன் காரணமாக மொத்த வியாபாரிகளின் அடக்க விலையே ரூ.17.50க்கு மேல் இருக்கும் போது, பல கட்டங்களைக் கடந்து சில்லறை வர்த்தகத்திற்கு வரும்போது ஒரு கிலோ அரிசியில் விலை ரூ.20/- ஐத் தாண்டி விடுகிறது. உடனே அரசயில் கட்சிகள் அரிசி விலை உயர்ந்து விட்டது என்று கூக்குரல் எழுப்புவார்கள். விவசாயிகளுக்கு கட்டுபடியாகிற விலை கொடுக்கும் போது, அரிசி விலை சற்று உயரத் தான் செய்யும். வேறு வழியில்லை இதனை நுகர்வோர் புரிந்து கொள்ள வேண்டும். அரசும் மக்களுக்கு இந்த உண்மையை உணர்த்த வேண்டும்.
  விவசாயிக்கு கட்டுபடியாகிற விலை கொடுத்தால் விலைவாசி மிகக்குறைந்து அளவிற்குத் தான் உயரும். மாறாக கட்டுபடியாகிற விலை வழங்கத் தவறினால், விவசாயிகள் ஊக்கம் இழந்து நிலங்களைத் தரிசாகப் போட்டு விடுவர். உற்பத்தி குறையும். அதன் காரணமாக விலை பன்மடங்கு உயரும். இதனால் விவசாயிகளும், நுகர்வோரும் ஒரு சேரப் பாதிக்கப்படுவர். பெருத்த லாபம் அடைவது மொத்த வணிகர்கள்தான் இந்த யதார்த்த நிலையை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும்.
    உற்பத்தி குறைவு காரணமாக ஏற்படும் உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு பருப்புவகைகள், சீனி, எண்ணெய்வித்துக்கள் ஆகியவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. இது ஒரு தற்காலிகத் தீர்வு தான். நிரந்தரத் தீர்வாக இருக்கமுடியாது. இது விலைவாசியைக் குறைக்காது. ஏனெனில் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களை கப்பலில் கொடு வரும் செலவினங்கள் (வரி, ஏற்று, இறக்குக் கூலி, போக்குவரத்து, சேதாரம் முதலியன) காரணமாக அப்பொருட்களை குறைவான விலைக்கு விற்க இயலாது.
    இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு தனது தேவைகளுக்கு இறக்குமதியை நம்பியிருக்க முடியாது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவது ஒன்றே மிகச்சிறந்த வழியாகும். உணவுப் பொருட்களில் குறிப்பாக அரிசி, கோதுமை, பருப்புவகைகள், எண்ணெய் விததுக்கள், சீனி ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்குவதே ஒரு மாற்று வழி, இரண்டாவது பசுமைப்புரட்சி நாட்டில் ஏற்பட்டாக வேண்டும்.உணவு உற்பத்தியைப் பெருக்க விவசாயிகளுகு்கு அரசு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும். அவர்ளுக்கு கட்டுபடியாகிற கொள்முதல் விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் அத்தியாவியப் பொருட்கள் அனைத்தும் அரசு மக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்க வேண்டும்.
         வெளிச்சந்தையைப் பொறுத்த அளவில் அரசின் கட்டுபாடு இல்லை என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. சற்றுத் தட்டுப்பாடு ஏற்பட்டாலே, பெரும் வணிகர்கள் உணவுப் பொருட்களை பதுக்கி விலைகளை தாறுமாறாக ஏற்றி விடுகிறார்கள். கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். பெரும் வணிகர்களைக் கட்டுக்படுத்தவும், பதுக்களை வெளியே கொண்டு வரவும் அரசுகள் போரிய நடவடிக்ககைள் எடுக்க வில்லை என்பது பெரும் கவலை அளிக்கும்     அம்சமாகும். அரசு இந்த விஷயத்தில் விரைந்து செயல்பட வேண்டும்.
      உற்பத்தி்ப் பெருக்கம், பதுக்கலை ஒழித்தல் இந்த இரண்டு அம்சங்களில் தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

2019 டிசம்பர்