4 செப்டம்பர், 2012

தமிழ் ஈழமும் - முஸ்லிம்களும் - பகுதி 3


பிளவின் தொடக்கம்
இலங்கையில் அனைத்து மாகாணங்களிலும் வாழும் முஸ்லிம்கள் தமிழைத் தாய் மொழியாக்க் கொண்டவர்களே. சிங்களத்தை தாய் மொழியாகக் கொண்டவர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையினரே. தொடர்ந்து பன்னெடுங்காலமாகத் தமிழர்களுக்கும் (தமிழ் பேசும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள்) முஸ்லிம்களுக்கும் நல்லுறவே நிலவி வந்துள்ளது. எந்த விதமான பிணக்குமின்றி இரு சமூக மக்களும் அமைதியாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்த நல்லுறவைக் குலைக்கும் வண்ணம் சில நிகழ்ச்சிகள் நடந்தேறின. தமிழ்ப் பிரமுகர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சைவ வேளாள சித்தாந்தம், இந்த நல்லுறவின் அடித்தளத்தை ஆட்டம் காண வைத்தது. இந்த சித்தாந்தத்தைப் பிரச்சாரம் செய்தோர் சைவ வேளாளர்களை உயர்வாகவும் மற்றவர்களைத் தாழ்வாகவும் கற்பித்தனர். முஸ்லிம்களைத் தூய்மையற்றவர்கள் என்றும் தொப்பி புரட்டிகள் என்றும் இழிவுபடுத்தினர்.  பொன்.ராமநாதன் போன்ற தமிழ்த் தலைவர்கள், “முஸ்லிம்கள் தனிப்பிரிவினர் அல்லர் அவர்கள் தமிழர்களே” என்று முஸ்லிம்களின் தனித்துவத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். சைவ வேளாள சித்தாந்தவாதிகளின் இந்தப் புதிய நிலைப்பாடு முஸ்லிம்களிடையே அதிருத்தியை ஏற்படுத்தியது. கொழும்பு மாவட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் வணிகத்தில் சிறப்புற்று விளங்கியது. பிற சிங்கள தமிழ் வணிகர்கள் மத்தியில் பொறாமையை ஏற்படுத்தியது. 1915 ஆம் ஆண்டு கொழும்பு நகரின் பல இடங்களில் சிங்களர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இந்த வணிகப் போட்டி காரணமாக மோதல்கள் வெடித்தன.
முஸ்லிம் வணிகர்கள் பலர் சிங்களர்களால் கொல்லப்பட்டனர். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்தக் கலவரங்களின் போது தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிராகவும் சிங்களர்களுக்கு ஆதரவாகவும் இருந்தனர். ஆனால் அப்போதிருந்த ஆங்கிலேய அரசு நடுநிலையுடன் செயல்பட்டது. கலவரத்திற்குக் காரணமான சிங்களர்கள் பலர் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். கொலைக் குற்றங்களில் ஈடுபட்ட சிலருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால் பொன்.ராமநாதன் போன்ற தமிழர் தலைவர்கள் லண்டன் சென்று மகாராணியைச் சந்தித்து சிங்களர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்துச் செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். தமிழர் தலைவர்களின் இந்தச் செயல் முஸ்லிம்களிடையில் கசப்புணர்ச்சியை ஏற்படுத்தியது.
1889 ஆம் ஆண்டு வரை இலங்கை சட்ட சபையில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் இருந்த்து, இதில் முஸ்லிம்கள் யாரும் நியமிக்கப்டவில்லை. முஸ்லிம்கள் தாங்கள் ஒரு தனித்துவமான சமூகம் என்றும் தங்களுக்குத் தனிப்பிரதி நிதித்துவம் வேண்டும் என்றும் ஆங்கில அரசிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்தக் கோரிக்கைக்குத் தமிழர் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். முஸ்லிம்கள் தமிழர்களே எனவே அவர்கள் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தில் அடங்குவர் என்றனர். எனினும், முஸ்லிம்களின் இடையறாத போராட்டம் காரணமாக சட்டசபையில் தனிப் பிரதிநிதித்துவம் பெற்றனர். இப்படி சமூக, தொழில் அரசியல் ரீதியாகவும் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையில் பிளவுகள் தோன்றின. இலங்கை விடுதலை பெற்ற பிறகு, அங்கு நாடாளுமன்ற ஜனநாயகம் அறிமுகப்படுத்தப்பட்டு அனைவருக்கும் வாக்குரிமை என்ற நிலை ஏற்பட்டது. முஸ்லிம்கள் சிங்களர்கள் நடத்தும் அரசியல் கட்சிகளில் இணைந்து தெற்கிலும், கிழக்கிலும் சில இடங்களைக் கைப்பற்றி சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றனர்.
1960க்குப் பின்னர், கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. ஏராளமான முஸ்லிம்கள் கல்வி கற்றனர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் முஸ்லிம் பாடசாலைகள் அரசின் உதவியுடன் தொடங்கப்பட்டன. அப்போது, இலங்கையின் கல்வி அமைச்சராக இருந்த பதியுத்தீன் மஃமுத், முஸ்லிம்கள் நடத்தும் பாடசாலைகளில் அரபி மொழி கற்றுக் கொடுக்க ஆலிம்களை நியமித்தார். அரசின் இத்தகைய ஆக்கபுர்வமான நடவடிக்கைகள் காரணமாக முஸ்லிம்கள் பெருமளவு கல்வி கற்று ஆசிரியர்களாகவும், அரசுத் துறைகளிலும் வேலை வாய்ப்பினைப் பெற்றனர். முஸ்லிம்கள் பெருமளவு அரசுப்பணிகளில் சேர்ந்த அந்தக் காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் தமிழர்களே உயர் அதிகாரிகளாக இருந்தனர். புதிதாகப் பணியில் சேர்ந்த முஸ்லிம்களை அந்த அதிகாரிகள் நியாய உணர்வோடும், நடுநிலையோடும் நடத்த வில்லை என்ற குற்றச்சாட்டு முஸ்லிம் ஊழியர்களிடமிருந்து எழுந்தது ஏற்கனவே இருந்த கசப்புணர்ச்சி காரணமாக இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் என முஸ்லிம்கள் நம்பினர்.
விடுதலைக்குப் பின்னர் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த சிங்கள அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வண்ணம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டன. 1953ஆம் ஆண்டு, பௌத்த சமயமே அந்நாட்டின் அரசாங்க சமயமாக அறிவிக்கப்பட்டது. சிங்களமே ஆட்சி மொழியாக இருக்கும் என சட்டம் கொண்டு வரப்பட்டது. 1972ஆம் ஆண்டு சிங்கள பௌத்தர் மட்டுமே அந்நாட்டின் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வரமுடியும் என சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதன் பின்னர் கல்வியைத் தரப்படுத்துதல் (Standardization of Education) என்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் படி தமிழர்களை விட சிங்களர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றால் போதும் அவர்களுக்கு உயர் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற நிலை தோன்றியது. சிங்கள பௌத்த அரசியல் தலைவர்களின் இந்தச் செயல்கள் தமிழ் மக்கள் மத்தியில் தங்களது எதிர்காலம் பற்றி ஐயங்களைத் தோற்றுவித்தன. தந்தை செல்வா, பின்னர் அமிர்தலிங்கம் போன்ற தமிழ்த் தலைவர்கள் தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து அறவழிப் போராட்டங்களைத் தொடர்ந்து பல ஆண்டுகள் நடத்தினர். எனினும் இலங்கை அரசின் போக்கில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் அறப்போராட்டங்கள் மூலம் தங்களது கோரிக்கைகளை வென்றெடுக்க இயலாது என்ற முடிவுக்கு வந்த தமிழ் இளைஞர்கள் தங்களுக்கிடையே பல்வேறு அமைப்புகளைத் தோற்றுவித்தனர். 1977ஆம் ஆண்டிற்குப் பிறகு டெலோ, எல்.டி.டி.ஈ, இ.பி.ஆர்.எல்.எப், பிளாட், பேராடென், ஈராஸ், டி.பி.எல்.எஸ். ஆகிய போராளி இயக்கங்கள் தோன்றின. இந்த இயக்கங்கள் ஆயுதப் போராட்டம் மூலமே இலங்கை அரசைப் பணிய வைக்க முடியும் என நம்பின. தவிரவும் இலங்கை அரசு தமிழர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காது. எனவே இலங்கையில் தமிழ் ஈழம் என்ற தனி நாடு ஒன்றை உருவாக்குவதே தங்களது இலக்கு என வெளிப்படையாக அறிவித்தனர். இந்தத் தனி நாடு அறிவிப்பிற்குப் பின்னர் இலங்கை அரசுக்கும், தமிழ்ப் போராளி இயக்கங்களுக்குமிடையே மோதல்கள் அதிகரித்தன.        (தொடரும்......

கருத்துகள் இல்லை:

2019 டிசம்பர்